மாவட்டம் முழுவதும் 82,514 மாணவ-மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்

வேலூர்,

கடந்த கல்வியாண்டு வரை 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

அதில் இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 41 ஆயிரத்து 127 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.

வேலூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 911 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 216 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

இதேபோல் பிளஸ்-2 தேர்வை வேலூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 736 மாணவ- மாணவிகளும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 651 மாணவ- மாணவிகளும் என மொத்தம் 41 ஆயிரத்து 387 பேர் எழுத உள்ளனர்.

82,514 பேர் எழுதுகிறார்கள்

இதன்மூலம் மொத்தம் 82 ஆயிரத்து 514 மாணவ- மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். கடந்த ஆண்டுவரை பிளஸ்-2 தேர்வுக்கு வேலூர் கல்வி மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 66 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது.

தற்போது பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படுவதால் வேலூர் கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களும் கூடுதலாக அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply