ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் 15 நாட்களாக நடத்திய நூதன போராட்டத்தையடுத்து பொங்கல் பண்டிகைக்குள் சாலை அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலை புதூர்நாட்டில் இருந்து சிங்காரபேட்டை வரை தார்சாலை அமைத்து தரக்கோரி புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் கடந்த 15 நாட்களாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பயனும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் போராட்ட குழுவினருக்கு திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயன் அமைதி கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி நேற்று திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மலை கிராம பிரமுகர்கள், தாசில்தார் ஸ்ரீராம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதூர்நாடு – சிங்காரப்பேட்டை வரையிலான அனைத்து கிளை சாலைகளும் போடப்பட்டுள்ளது. இந்த சாலை வனத்துறை சாலை என்பதால் வன பாதுகாப்பு சட்டம் மற்றும் அதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளின்படி பல்வேறு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி செயல்பட்டால் மட்டுமே உறுதியான நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. ரூ.4 கோடியே 73 லட்சம் நிதியும் தயாராக உள்ளது, அனுமதி கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும். வருகிற பொங்கல் பண்டிகைக்குள் சாலை பணிகள் தொடங்கப்படும். மாணவர்களின் எதிர்கால நலன்கருதி போராட்டத்தை கைவிட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து போராட்ட குழுவினர் அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று கொண்டு, தங்களது போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவும் சம்மதம் தெரிவித்தனர்.